Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

சொந்த ஊர்களுக்கு விடுமுறையையொட்டி 4.50 லட்சம் பேர் பயணம்: பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம்

0

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 4.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கும் மேலாகபொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக கடந்த 4-ம் தேதி, விரைவு பேருந்துகளின் முன்பதிவு எண்ணிக்கை புதியஉச்சத்தை அடைந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்ற பேருந்துகளில் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையொட்டி, கோயம்பேடு – மதுரவாயல் சாலையில் பிற்பகல் முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதைத்தவிர்த்து விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில்நிலையங்களிலும் கூட்டம் நிரம்பிகாணப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க கூட்டம் குவிந்தது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், சிலர் படிகளில் நின்றுகொண்டே பயணம் செய்தனர். இவ்வாறு நேற்று மட்டும் பேருந்து, ரயில்களில் மொத்தம் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பயணிகளின் வருகையைதொடர்ந்து கண்காணித்து, பேருந்துகளை இயக்க அலுவலர்களுக்கு தக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். பயணிகள் ஊர் திரும்பவும் போதிய பேருந்துகள் இயக்கப்படும்” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்